Yuki Bhambri is trained by famous coach Stephen Cohen.

மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் தொடங்குவதால் அதற்கு தயாராகும் வகையில் பிரபல பயிற்சியாளரான ஸ்டீபன் கூனிடம் பாங்காக்கில் பயிற்சி பெற இருக்கிறார் இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ல் தரவரிசையின் முதல் நூறு இடங்களுக்குள்ளாக வந்த யூகி பாம்ப்ரியின் முன்னேற்றத்திற்கு காயம் ஒரு தடைக்கல்லாக அமைந்தது.

2017-ல் அவர் அதிக போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் புணே சேலஞ்சர் பட்டத்தை வென்றது, பெங்களூரு ஓபனில் அரையிறுதி வரை முன்னேறியது அவருக்கான முன்னேற்றமாக அமைந்தது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் யூகி பாம்ப்ரி கூறியது: "பெரிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதும், முடிந்த வரையில் விளையாடுவதுமே முன்னேற்றத்துக்கு முக்கியமாகும்.

சில ஏடிபி போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறியுள்ளேன். ஏடிபி, சேலஞ்சர், ஐடிஎஃப் ஃபியூச்சர்ஸ் என எந்த போட்டியாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவதே நோக்கமாக இருக்க வேண்டும்.

என்னைப் பொருத்த வரையில், ஏடிபி பட்டம் வெல்லும் தகுதி எனக்கு உள்ளது. மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் மூலமாக அடுத்த சீசன் தொடங்குகிறது. அதற்கு தயாராகும் வகையில் பிரபல பயிற்சியாளரான ஸ்டீபன் கூனிடம் பாங்காக்கில் பயிற்சி பெற்றேன்.

கொரியா, தைவான், ஜப்பான், ஜார்ஜியா என ஆசியாவின் சிறந்த டென்னிஸ் வீரர்கள் அங்கு பயிற்சி பெற்றனர். அந்தச் சூழல் சிறப்பான ஒன்றாக இருந்தது. பயிற்சியின்போது என்னை மேம்படுத்திக் கொள்ள முயன்றேனே தவிர, ஒட்டுமொத்தமாக நெருக்கடியில் ஆழ்த்திக் கொள்ளவில்லை.

பேக்ஹேண்ட் ஷாட், ஃபோர்ஹேண்ட் ஷாட் என ஒவ்வொன்றிலுமாக சிறிதளவு மேம்பட்டுள்ளேன். மகாராஷ்டிர ஓபனை நல்லமுறையில் தொடங்குவது சிறப்பாக இருக்கலாம். ஆனால், அடுத்து வருவது நீண்ட சீசனாக இருக்கும்.

தொடர்ந்து 25 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. எனவே, வாழ்வா, சாவா ஆட்டமாக விளையாடப் போவதில்லை என்று யூகி பாம்ப்ரி கூறினார்.