உலக சூப்பர் சீரிஸ் பைனல் பாட்மிண்டன் போட்டியை இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றியோடு தொடங்கினார்.

துபையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்றுள்ள சிந்து தனது முதல் ஆட்டத்தில் 12-21, 21-8, 21-15 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுசியைத் தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 12-21 என்ற செட் கணக்கில் இழந்த சிந்து, அடுத்த செட்டில் அபாரமாக ஆட, அந்த செட் 21-8 என்ற கணக்கில் அவர் வசமானது.

தொடர்ந்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டிலும் அசத்தலாக ஆடிய சிந்து, அந்த செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை வெற்றியில் முடித்தார்.

சிந்து தனது 2-ஆவது ஆட்டத்தில் சீனாவின் சன் யூவை சந்திக்கிறார்.