World Super Series Badminton Tournament Started Today Sindhu Srikanth participation in India

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் போட்டி துபையில் இன்று தொடங்கவுள்ளது. இதில், இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

உலகத் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி துபையில் இன்று தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில், மகளிர் பிரிவில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஹி பிங்ஜியாவை எதிர்கொள்கிறார்.

இந்தாண்டு நடைபெற்ற 12 சூப்பர் சீரிஸ் போட்டிகளில் சிந்து பங்கேற்றுள்ளார். இந்தியா ஓபன், கொரியா ஓபன் ஆகிய போட்டிகளில் சாம்பியன் பட்டத்தையும், கிளாஸ்கோ உலக சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த மாதம் நடைபெற்ற ஹாங் காங் ஓபன் போட்டி ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், ஆடவர் பிரிவில், உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்ஸன்னை தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் எதிர்கொள்கிறார்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய ஓப்பனில் விக்டர் ஆக்ஸ்லென்னை வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனால், இரு வீரர்களுக்கு இடையே இன்று நடைபெறும் ஆட்டம் விறுவிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தாண்டில் நடைபெற்ற இந்தோனேஷியா ஓபன், ஆஸ்திரேலியா ஓபன், டென்மார்க் ஓபன், பிரெஞ்ச் ஓபன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.