போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கும் உலகின் பழமையான, புகழ்பெற்ற ஆல் - இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் சிந்துவும், சாய்னாவும் பங்கேற்கின்றனர்.

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி 1899-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 

உலகின் பழமையான, புகழ்பெற்ற பேட்மிண்டன் தொடர் என்பதால் இந்த போட்டியில் சாம்பியன் வெல்வது ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளின் கனவு.

மொத்தம் ரூ.6½ கோடி பரிசுத் தொகைக்கான இந்த ஆண்டுக்குரிய ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் திருவிழா பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது. இது வரும் 18-ஆம் தேதி வரை நடக்கும். 

இதனையொட்டி முன்னணி நட்சத்திரங்கள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதன்படி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால் களம் காணுகிறார்கள். 

இதில் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் சாய்னா நேவாலுக்கு முதல் சுற்றே பெரும் தடையாக இருக்கிறது. அவர் தொடக்க ரௌண்டில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான சீனத்தைபேவின் தாய் ஜூ யிங்கை எதிர்கொள்கிறார்.

இருவரும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 5-ல் சாய்னாவும், 9-ல் தாய் ஜூ யிங்கும் வெற்றி கண்டுள்ளனர். 

கடந்த 4 ஆண்டுகளாக அதாவது கடைசியாக தாய் ஜூ யிங்குக்கு எதிராக ஆடிய 7 ஆட்டங்களிலும் சாய்னா தோல்வியையே சந்தித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. 

நான்காம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்றில், தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்குடன்  மோதுகிறார். 

ஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயினின் கரோலினா மரின் 2-ஆம் நிலை வீராங்கனை ஜப்பானின் அகானே யமாகுச்சி , உலக சாம்பியன் ஜப்பானின் நஜோமி ஒகுஹரா ஆகியோரும் களமிறங்குகின்றனர். 

மற்றொரு பிரிவான ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கணுக்கால் காயத்தால் முதல் நிலை வீரரும், உலக சாம்பியனுமான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென் விலகிய நிலையில், ஆறு முறை சாம்பியனான சீனாவின் லின் டான், சீனாவின் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங், நடப்பு சாம்பியன் மலேசியாவின் லீ சோங் வெய், 3-ஆம் நிலை வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த், தென்கொரியாவின் சன் வான் ஹோ ஆகியோர் களமிறங்குகின்றனர்.