ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் முஸ்கன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடந்து வருகிறது. 

இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனை முஸ்கன் 35 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கத்தை வென்றார். 

சீன வீராங்கனை சிஹாங் 34 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், தாய்லாந்து வீராங்கனை கன்யாகோன் ஹிருன்போம் 26 புள்ளியுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். 

இந்தப் போட்டியின் அணிகள் பிரிவில் முஸ்கன், மனுபாகெர், தேவன்ஷி ராணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. 

அருனிமா கௌர், மஹிமா துர்ஹி அகர்வால், தனு ராவல் ஆகியோர் அடங்கிய மற்றொரு இந்திய அணி வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கமும் வென்றன. 

அதன்படி, பதக்கப் பட்டியலில் சீனா 9 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்திலும், இந்தியா 9 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்துடன் 2–வது இடத்திலும் உள்ளது.