world cup foot ball opening ceremany in russia
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 21வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடங்கியது. . இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

இந்த உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய அணிகள் முன்னணியில் உள்ளன.. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரவு 8 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது. முதலில் மாஸ்கோவின் லூஸ்நிகி மைதானத்தில் ரஷ்யாவின் போட்டி நடக்கும் மைதானங்களில் அழகை குறிக்கும் விதமாக வீடியோ மெகா ஸ்கீரினில் ஒளிபரப்பபட்டது.

தொடர்ந்து பாப் பாடகர் ராபி வில்ஸ் பெப்பி நம்பர் பாடலை பாடி விழாவை தொடங்கி வைத்தார். பின் பங்கேற்கும் 32 அணிகளின் கொடியை பிடித்தபடி 32 அணிகளான நடனக் கலைஞர்கள் வண்ணமயமாக நடனமாடினர்.

கலைஞர்களின் நடனம் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் விழாவில் இடம் பெற்றது. மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள், கலை நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
