உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்றின் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டது.
 
உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றின் இறுதி ஆட்டம் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 46.5 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 

அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 40.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்கள் எடுத்து வென்றது. 

 டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளில் அதிகபட்சமாக ரோவ்மென் பாவெல் 44 ஓட்டங்கள் எடுத்தார். 

ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 

அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக முகமது ஷாஸாத் 84 ஓட்டங்கள் அடித்தார். சமியுல்லா 20 ஓட்டங்கள், முகமது நாபி 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கிறிஸ் கெயில் 2 விக்கெட் வீழ்த்தினார்.
 
இதில், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாஸாத் ஆட்டநாயகன் ஆனார்.

இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான், ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 100 விக்கெட்டுகள் (44 ஆட்டங்களில்) வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 

முன்னதாக, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 52 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.