உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி அரையிறுதியில் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கம் வென்று வெளியேறினார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில், பாந்தம்வெயிட் 56 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி மற்றும் அமெரிக்காவின் டியுக் ரேகன் ஆகியோர் மோதினர்.

இதில் கெளரவ் பிதுரியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்ய டியுக் ரேகன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். கெளரவ் பிதுரி வெண்கலப் பதக்கத்துடன் போட்டியை விட்டு வெளியேறினார்.

இதன்மூலம், முதல் முறையாக பங்கேற்ற உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையை கெளரவ் பெற்றுள்ளார்.

இதுவரையிலான உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

அடுத்து நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் டியுக் ரேகனும், ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் டஸ்மடோவும் மோதுகின்றனர்.

இந்தப் போட்டியில் பங்கேற்ற இதர இந்தியர்கள் ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில், இந்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா ஒரு வெண்கலப் பதக்கம் மட்டும் வென்றுள்ளது என்பது கொசுறு தகவல்.