உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீரர் ஒமர் மெக்லியாட் தங்கப் பதக்கம் வென்றதன்மூலம் இந்தாண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்கத்தை வென்று ஜமைக்காவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பதினாறாவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்காவின் ஒமர் மெக்லியாட் 13.04 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

நடப்பு சாம்பியனாக இருந்த ரஷியாவின் செர்கெய் ஷுபென்கோவ் 0.1 விநாடி பின்தங்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஹங்கேரியின் பலாஜஸ் பாஜி மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதனிடையே ஆடவர் பிரிவு மும்முறை தாண்டுதல் போட்டியில் வெனிசூலாவின் யுலிமார் ரோஜாஸ் தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிர் பிரிவு சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் போலாந்தின் அனிதா லோடார்ஸிக் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் ஃபெய்த் கிபைகான் 4 நிமிடம் 2.59 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.