தென் கொரியாவுக்கு எதிரான மகளிர் ஹாக்கி போட்டியில் முதல் ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 

தென் கொரியாவுக்கு எதிரான மகளிர் ஹாக்கி போட்டி சியோல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் ஒரே கோலை இந்தியாவின் லால்ரெம்சியாமி அடித்தார். 

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா அதன் பலனாக 5-வது நிமிடத்திலேயே கோல் வாய்ப்பு பெற்றது. 

கொரிய தடுப்பாட்டை லாவகமாகக் கடந்து சென்று கோல் கீப்பர் மிஜின் ஹானை தாண்டி அருமையாக கோலடித்தார் லால்ரெம்சியாமி. எனினும், பின்னர் மீண்ட தென் கொரியா அடுத்து கோல்கள் விழாமல் தடுப்பாட்டம் ஆடியது. 

அதேவேளையில் இந்திய கோல் போஸ்ட்டை நெருங்க தென் கொரிய வீராங்கனைகளுக்கு இந்திய அணி வாய்ப்பு வழங்கவில்லை.  இச்சூழலில் 18-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த முறை இந்தியாவின் கோல் முயற்சியை கொரிய கோல்கீப்பர் மிஜின் ஹான் திறம்படத் தடுத்தார்.

அதேபோல, 23-வது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு கோலாகவிடாமல் இந்திய கோல்கீப்பர் ஸ்வாதி அரணமைத்தார். 

தொடர்ந்து முன்னேறிய தென் கொரியாவின் கோல் வாய்ப்புகள் இந்தியாவின் தடுப்பாட்டத்தாலும், கோல் கீப்பர் ஸ்வாதியாலும் திறம்பட தடுக்கப்பட்டன. 

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், இறுதியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது.