மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது இந்தியா. 

ஐசிசி சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, 3 ஆட்டங்களுடன் நடைபெறும் இத்தொடரில் ஆஸ்திரேலியா தற்போது முன்னிலை பெற்றது.

அண்மையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய மகளிர் அணி, தற்போது சொந்த மண்ணில் தோல்வியுடன் தொடங்கியுள்ளது. 

குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் எடுத்து வென்றது. 

இந்திய அணியில் கடைசி ஆர்டரில் வந்த பூஜா வஸ்த்ரகர் அதிகபட்சமாக 51 ஓட்டங்கள் சேர்த்தார். தொடக்க வீராங்கனை பூனம் ராவத் 37 ஓட்டங்கள் , ஏழாவது வீராங்கனை சுஷ்மா வர்மா 41 ஓட்டங்கள் சேர்த்து ஸ்கோரை சற்று பலப்படுத்தினர்.

ஸ்மிருதி 12 ஓட்டங்கள், கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் 9 ஓட்டங்கள், தீப்தி சர்மா 18 ஓட்டங்கள், வேதா கிருஷ்ணமூர்த்தி 16 ஓட்டங்களில் வெளியேறினர். சிக்ஷா பாண்டே 2 ஓட்டங்கள், பூனம் யாதவ் 5 ஓட்டங்களில் நடையைக் கட்டினர். 

ஆஸ்திரேலிய தரப்பில் ஜெஸ் ஜோனசன் 4, அமன்டா வெல்லிங்டன் 3, ஆஷ்லே கார்டனர், மேகன் ஷட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனை நிகோல் போல்டன் 100 ஓட்டங்கள், எலிஸ் பெர்ரி 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். 

நிகோலுடன் வந்த அலிசா ஹீலி 38 ஓட்டங்கள், மெக் லேனிங் 33 ஓட்டங்கள் சேர்த்து உதவினர். 

இந்திய தரப்பில் சிக்ஷா பாண்டே ஒரு விக்கெட் எடுத்தார்.

ஆஸ்திரேலியாவின் நிகோல் போல்டன் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார்.

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு ஆஸ்திரேலியா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.