Winter Olympics Competition in Pyongyang for the first time - more interesting information inside ...
முதன்முறையாக பியோங்சாங் நகரில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தென் கொரியா நடத்த அனுமதி அளித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி).
ஐஓசி நடத்திய வாக்கெடுப்பில் பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுடன் தென் கொரியாவும் பங்கேற்றது. இதில், 63 வாக்குகளைப் பெற்ற தென் கொரியா இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றது.
முன்னதாக, தலைநகர் சியோலில் கடந்த 1988-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டியை தென் கொரியா நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010, 2014-ஆம் ஆண்டுகளிலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சித்த தென் கொரியா, இறுதிச்சுற்று வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளைப் பெற்று அந்த வாய்ப்பை இழந்திருந்தது.
இந்த நிலையில், இந்த 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை தென் கொரியா பெற்றுள்ளது.
இந்த பியோங்சாங் ஒலிம்பிக்கில் மொத்தம் 92 நாடுகளும், 2,952 வீரர் /வீராங்கனைகளும் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கினாலும், தொடக்க விழா நிகழ்ச்சிகள் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. 25-ஆம் தேதி நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒலிம்பிக் போட்டிக்கான சின்னமாக வெள்ளைப் புலியை தென்கொரியா அறிவித்துள்ளது. வெள்ளைப் புலி, அந்நாட்டு புராணக் கதைகளிலும், கலாசாரத்திலும் நெருங்கிய தொடர்புடையதாகும்.
இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஈகுவடார், எரித்ரியா, கொசோவா, நைஜீரியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய 6 நாடுகள் முதல் முறையாகப் பங்கேற்க உள்ளன.
ஆல்பைன் ஸ்கீயிங், பைத்லான் (கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங், ரைஃபிள் துப்பாக்கி சுடுதல்), பாப்ஸ்லிக், கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங், கர்லிங், ஃபிகர் ஸ்கேட்டிங், பிரீ ஸ்டைல் ஸ்கீயிங்,
ஐஸ் ஹாக்கி, லூஜ், நார்டிக் கம்பைன்ட், ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங், ஸ்கெலட்டான், ஸ்கை ஜம்பிங், ஸ்னோ போர்டு, ஸ்பீடு ஸ்கேட்டிங் ஆகிய 15 விளையாட்டு போட்டிகள் இந்த ஒலிம்பிக்க்கில் நடைபெறவுள்ளன.
இந்தியாவின் சார்பில் பனிச்சறுக்கில் ஒரு வகையான லூக் விளையாட்டு வீரர் ஷிவா கேசவனும், கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் வீரர் ஜெகதீஷ் சிங்கும் பங்கேற்கின்றனர். இதில் ஷிவா, 6-வது முறையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கிறார்.
