விம்பிள்டன் டென்னிஸ் …..முதல்முறையாக முகுருஜா சாம்பியன்போராடி வீழ்ந்தார் வீனஸ் வில்லியம்ஸ்

லண்டனில் நடைபெற்று வந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஜா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில், அமெரிக்க வீராங்கனையும் முன்னாள் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருஜா கோப்பையை வென்றுமகிழ்ந்தார்.

லண்டனில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழமையான விம்பிள்டன் டென்னஸ் போட்டி நடந்தது. மகளிர் ஒற்றையர்  பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஜாவை எதிர்கொண்டார் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ்.

பரபரப்பாக 77 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸை 7--5, 6-0 என்ற நேர் செட்களில் தோற்கடித்து முதல் முறையாக கோப்பையை வென்று முகுருஜா முத்தமிட்டார்.

முகுருஜா பெறும் முதலாவது விம்பிள்டன் பட்டம் இதுவாகும். இதன் மூலம் விம்பிள்டன் பட்டத்தை பெறும் 2-வது ஸ்பெயின் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். இதற்கு முன் கடந்த 1994ம் ஆண்டு, கோச்சின்டா மெச்சின்ட்ஸ் பட்டம் வென்று இருந்தார்.

இந்த ஆட்டத்தை ஸ்பெயின் நாட்டு அரசர் ஜூவாஸ் கார்லோஸ் பார்த்து ரசித்தார். முகுருஜா பட்டம் வென்றவுடன், அவருக்கு கைகுலுக்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் கடந்த 8 ஆண்டுகளாக விம்பிள்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு வராமல் இருந்து, இப்போது பைனலுக்கு வந்து பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வி அடைந்தார்.