நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி 3-0 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்தது. அந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி முழுக்க முழுக்க நியூசிலாந்தின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியது. 

இதையடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் நியூசிலாந்து அணி இன்று நடந்த மூன்றாவது போட்டியில் களமிறங்கியது. ஆனால் இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சோபிக்க தவறிவிட்டது நியூசிலாந்து அணி. அந்த அணியின் டாப் ஆர்டர்கள் மீண்டும் சொதப்ப, டெய்லர் மற்றும் டாம் லதாமின் அரைசதத்தால் அந்த அணி 243 ரன்களை அடித்தது. 

வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணிக்கு இது மிகவும் எளிதான இலக்கு. 244 ரன்கள் என்ற இலக்கை ரோஹித் - கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் - ராயுடு ஆகிய இரண்டு ஜோடிகளின் சிறப்பான பேட்டிங்கால் இலக்கை இந்திய அணி எளிதாக எட்டியது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 10 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. 

இந்த போட்டியிலும் இந்திய அணி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி எளிதாக வெற்றியை பெற்றது. இந்திய அணிக்கு எந்த வகையிலும் எந்த இடத்திலும் நியூசிலாந்து அணி நெருக்கடி கொடுக்கவேயில்லை. 

இதையடுத்து போட்டிக்கு பின்னர் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், இந்திய அணி மிகச்சிறந்த அணி. அவர்கள் எங்களுக்கு தக்க பாடம் புகட்டிவிட்டார்கள். எங்களது இன்றைய ஆட்டம் கொஞ்சம் மேம்பட்டிருந்தது. இந்தியாவிடமிருந்து சிறந்த பாடங்களை கற்றுக்கொண்டுள்ளோம். எங்களை தவறிழைக்க வைப்பதற்காக சிறப்பாக திட்டமிட்டு அவற்றை சரியாக செயல்படுத்துகின்றனர். ரோஸ் டெய்லர் மற்றும் லதாம் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் அபாரம். இந்திய அணிக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்க வேண்டுமென்றால் விரைவிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டும் என்று வில்லியம்சன் தெரிவித்தார்.