இந்தியா - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெலேவில் இன்று தொடங்குகிறது. வெளிநாட்டு மண்ணில் எதிரணியை இந்தியா 'ஒயிட் வாஷ்' ஆக்கியதில்லை என்ற 85 ஆண்டுகால வரலாற்றை மாற்றுமா இந்தியா என்று பார்ப்போம்.

முதல் இரு போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, 3-வது டெஸ்டிலும் வென்று இலங்கையை 'ஒயிட் வாஷ்' ஆக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

இந்தப் போட்டியில் இலங்கையை வீழ்த்தினால் வெளிநாட்டு மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் எதிரணியை 'ஒயிட் வாஷ்' ஆக்கிய முதல் இந்திய அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

85 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எந்த அணியையும் 'ஒயிட் வாஷ்' ஆக்கியதில்லை.

அதேநேரத்தில் இலங்கை அணி சொந்த மண்ணில் 'ஒயிட் வாஷ்' தோல்வியை தவிர்க்கப் போராடும். தற்போது பலவீனமாக இருக்கும் அந்த அணி, இந்தியாவை வீழ்த்துவது கடினமாக போராட வேண்டும்.

இந்திய அணி இந்தப் போட்டியிலும் மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் கோலி, அஜிங்க்ய ரஹானே என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பின்வரிசையில் அஸ்வின், ரித்திமான் சாஹா கூட்டணி பலம் சேர்க்கிறது. எப்போதுமே ஈரப்பதமாக காணப்படும் பல்லகெலே மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தப் போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கலாம்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமேஷ், முகமது சமி ஆகியோருடன் 3-வது சுழற்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் இடம்பெறலாம்.

அஸ்வினுடன் 2-ஆவது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம்பெற வாய்ப்பு உண்டு.

இலங்கை அணியில் திமுத் கருணாரத்னே, உபுல் தரங்கா, குஷல் மென்டிஸ், தினேஷ் சன்டிமல், மேத்யூஸ், டிக்வெல்லா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

அதற்கடுத்தபடியாக குஷல் மென்டிஸ், டிக்வெல்லா ஆகியோர் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் நுவான் பிரதீப் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடாதது பெரும் பின்னடைவு. அவருக்குப் பதிலாக துஷ்மந்தா இடம்பெறலாம். எனவே வேகப்பந்து வீச்சில் தில்ருவான் பெரேரா, விஸ்வா பெர்னாண்டோ ஆகியோரையும் சுழற்பந்து வீச்சில் டி சில்வாவையே நம்பியுள்ளது இலங்கை.