கேப்டன் விராட் கோலியோ அல்லது ரோஹித் சர்மாவோ யாராக இருந்தாலும் ஏதேனும் ஒரு பிரச்னை என்றால் தோனியிடம் தான் செல்ல வேண்டும். தோனி இந்திய அணியில் நீடிப்பதற்கு இந்த ஒரு காரணம் போதும். 

இந்திய அணியின் கேப்டனாக இருந்து, இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும்  வென்று கொடுத்தவர் தோனி. கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து கோலி கேப்டனானார்.

அதன்பிறகு 2019 உலக கோப்பைக்கு புதிய கேப்டனின் தலைமையிலான அணி உருவாவதற்கு போதிய அவகாசம் வழங்கும் விதமாக கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்புகளிலிருந்து விலகினார். இதையடுத்து அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளுக்குமான இந்திய அணிக்கு கோலி கேப்டனானார்.

கோலி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி செல்கிறார். கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் தொடர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். இருவருமே சிறப்பாக செயல்படுகின்றனர் என்றாலும் கோலியின் கேப்டன்சியில் சில குறைபாடுகள் உள்ளன. அவரது கேப்டன்சியில் அனுபவமும் நேர்த்தியும் தென்படவில்லை. ஆனால் பவுலர்களை பயன்படுத்துவது, ஃபீல்டிங் செட்டப் ஆகியவற்றில் கோலியை விட ரோஹித் சிறப்பாகவே செயல்படுகிறார். 

அணியில் சீனியர் தோனி தான். அதுவும் முன்னாள் கேப்டன் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த அனுபவ வீரர். அதனால் கேப்டன் ரோஹித்தாக இருந்தாலும், கோலியாக இருந்தாலும், நெருக்கடியான சூழல்களில் ஆலோசனைகள் வழங்குவது தோனி தான். இருவருமே தோனியிடம் ஆலோசனை கேட்டுத்தான் செயல்படுகின்றனர். அவர்களாக வந்து ஆலோசனை கேட்காத நேரத்திலும், தேவை என்றால் தோனி அவராகவே சென்று பயனுள்ள ஆலோசனைகளை வழங்கிவருகிறார். 

பொதுவாகவே இளம் வீரர்களை ஊக்குவித்து வழிநடத்தி அவர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவதில் வல்லவரான தோனி, ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில், அறிமுகமான இளம் பவுலர் கலீல் அகமதுவிற்கு ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தினார். அதேபோல ஸ்பின்னர்களான குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவருக்கும் எப்போது எந்த பந்து வீச வேண்டும் என்பதை விக்கெட் கீப்பராக நின்றுகொண்டே வழிநடத்திவருகிறார். இவையனைத்துமே நல்ல முடிவுகளை கொடுக்கின்றன. 

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கூட ஸ்லிப்பில் நின்ற ஷிகர் தவானை ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் நிறுத்துமாறு ரோஹித்திடம் கூறினார். அதன்படியே தவானும் அங்கு நிறுத்தப்பட்டார். அதற்கு அடுத்த பந்தே ஷாகிப் அல் ஹாசன் அவுட்டானார். தனது அனுபவத்தின் வாயிலாக இதுபோன்ற சிறந்த ஆலோசனைகளை வழங்கி கேப்டன்களை வழிநடத்துபவர் தோனி. தோனி சரியாக ஆடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன். எனவே அவரது அனுபவ அறிவு அணிக்கு பயன்படும் என்ற வகையில், உலக கோப்பை வரை தோனி ஆட வேண்டியது காலத்தின் கட்டாயம்.