மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் அரையிறுதியில் மோதுகின்றனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் ஆராவாரம்.

அமெரிக்கா நாட்டின் மியாமி நகரில் நடைபெற்று வரும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் போட்டியில் நேற்று ஆடவர் ஒற்றையர் காலிறுதி நடைபெற்றது.

இந்தப் போட்டித் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ஃபெடரர் 6-2, 3-6, 7-6 (6) என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தினார்.

விறுவிறு என நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றிய ஃபெடரர், அடுத்த செட்டை 3-6 என்ற கணக்கில் பெர்டிச்சிடம் பரிதாபமாக இழந்தார்.

இருந்தும் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டில் இருவரும் அபாரமாக ஆட, அந்த செட் டைபிரேக்கருக்குச் சென்றது. அதில் ஒரு கட்டத்தில் 4-6 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த ஃபெடரர், பின்னர் அபாரமாக ஆடி அந்த செட்டை 7-6 (6) என்ற கணக்கில் நூலிழையில் வெற்றிப் பெற்றார்.

தனது வெற்றி குறித்துப் ஃபெடரர் பேசியது: "இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் நான் அதிர்ஷ்டசாலி. டைபிரேக்கர் செட் இருவருக்கும் சமமான வாய்ப்பாகும். நான் டைபிரேக்கர் செட்டில் தோற்க வாய்ப்புள்ளது என்றே கருதினேன்' என்று பேசினார்.

இந்த சீசனில் இதுவரை 18 ஆட்டங்களில் விளையாடி, அதில் 17-ல் ஃபெடரர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கிர்ஜியோஸ் கடுமையாக போராடி 6-4, 6-7 (9), 6-3 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தினார்.

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் நிக் கிர்ஜியோஸும், ஃபெட்ரரும் மோதுகின்றனர்.