மெல்போர்னில் நடந்த பாக்சிங் டே ஆஷஸ் டெஸ்ட் போட்டி வெறும் இரண்டு நாட்களில் முடிவடைந்ததால்  உலக கிரிக்கெட்டின் பல்வேறு நிபுணர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்தனர்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான நான்காவது பாக்சிங் டே ஆஷஸ் டெஸ்டிற்காக பயன்படுத்தப்பட்ட, அதிகம் விமர்சிக்கப்பட்ட பிட்ச் குறித்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் தலைமை கியூரேட்டர் மாட் பேஜ் தனது மெளனத்தை கலைத்துள்ளார். முதல் நாளில் 20 விக்கெட்டுகள் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாகவும் மீண்டும் இதுபோன்ற ஒரு போட்டியில் ஒருபோதும் ஈடுபடமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

2 நாளில் முடிந்த 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி

மெல்போர்னில் நடந்த பாக்சிங் டே ஆஷஸ் டெஸ்ட் போட்டி வெறும் இரண்டு நாட்களில் முடிவடைந்ததால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட்டின் பல்வேறு நிபுணர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்தனர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த, போட்டி முழுவதும் 36 விக்கெட்டுகள் விழுந்தன, ஒரு அரைசதம் கூட அடிக்கப்படவில்லை.

நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்

இந்த பிட்ச்சை தயார் செய்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் தலைமை கியூரேட்டர் மாட் பேஜ், ''போட்டியின் முதல் நாள் நடந்த அனைத்தையும் பார்த்து நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். ஒரு நாளில் 20 விக்கெட்டுகள், நான் இது போன்ற ஒரு டெஸ்ட் போட்டியில் ஒருபோதும் இருந்ததில்லை, இனிமேலும் இது போன்ற ஒரு டெஸ்ட் போட்டியில் இருக்க மாட்டேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

மீண்டு வருவோம்

தொடர்ந்து பேசிய அவர், ''இரண்டு நாட்களாக நடந்த அனைத்தையும் பார்ப்பது ஒரு ரோலர்கோஸ்டர் பயணமாக இருந்தது. ஆனால் நாங்கள் இதிலிருந்து கற்றுக்கொள்வோம், இதிலிருந்து வளர்வோம், இதில் இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம், கடந்த ஆண்டுகளில் நாங்கள் செய்ததைப் போலவே. நாங்கள் முன்பை விட பெரியதாகவும், சிறந்ததாகவும், வலிமையாகவும் மீண்டு வருவோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை'' என்று தெரிவித்தார்.

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச்

''இந்த ஆண்டு, நாங்கள் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒரு பிட்சை தயாரித்துள்ளோம். கடந்த ஆண்டு எங்களுக்கு அதிக வெப்பமான வானிலை இருந்தது, இது எங்களுக்கு ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதை எளிதாக்கியது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் அந்த போட்டியை வழங்க கடந்த ஆண்டு பிட்ச்சின் மேற்புறத்தில் அதிக ஈரப்பதத்தை விட்டிருந்தோம். அந்த ஆட்டத்திற்கு முன்னதாக நாங்கள் சமநிலையை நன்றாக வைத்திருந்ததாக உணர்ந்தோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்.