காமன்வெல்த் பாட்மிண்டன் பிரிவில் சிந்து, சாய்னா, ருத்விகா கட்டே, கே.ஸ்ரீகாந்த் ஆகிய இந்திய வீரர், வீராங்கனைகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

காயம் காரணமாக கலப்பு அணிகள் ஆட்டத்தில் விளையாட முடியாமல் பி.வி.சிந்து அவதிப்பட்டு வந்தார். தற்போது காயம் ஆறிய நிலையில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பங்கேற்ற அவர் 21-6, 21-3 என்ற செட் கணக்கில் பிஜியின் ஆந்த்ரா வொய்ட்சைடை 18 நிமிடங்களில் வென்றார்.

அதேபோன்று, இரண்டாம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் 21-3, 21-1 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் எல்சி டி வில்லியர்ஸை தோற்கடித்தார்.

மற்றொரு வீராங்கனையான ருத்விகா கட்டே 21-5, 21- 7 என்ற செட் கணக்கில் கானாவின் கிரேஸ் அட்டிபக்காவை வீழ்த்தினார்.

அதேபோன்று ஆடவர் பிரிவில் கே.ஸ்ரீகாந்த் 21-13, 21-10 என்ற செட்கணக்கில் மோரீஷிஸின் ஆதிஷ் லூபாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

ஏற்கெனவே கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. தற்போது தனி நபர் பிரிவு ஆட்டங்களிலும் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது கூடுதல் தகவல்.