ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு எதிராக இந்தியா எந்தெந்த ஊர்களில் விளையாடுகிறது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

பிசிசிஐயின் போட்டி நிர்ணயக் குழுக் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைப்பெற்றதை அடுத்து பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளதரி கூறியது:

“இந்த ஹோம் சீசனில் இந்திய அணி வரும் செப்டம்பர் முதல் டிசம்பர் கடைசி வரையிலான காலகட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடர்களில் மொத்தமாக 23 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான தொடரின் ஐந்து ஒருநாள் ஆட்டங்கள் சென்னை, பெங்களூரு, நாகபுரி, இந்தூர், கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறும்.

டி20 ஆட்டங்கள் மூன்றும் ஐதராபாத், ராஞ்சி, குவாஹாட்டியில் நடைபெறும். இந்தத் தொடர் செப்டம்பர் மாதத்தின் மத்தியில் தொடங்கும்.

இதேபோல், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்று ஒருநாள் ஆட்டங்கள் புணே, மும்பை, கான்பூரிலும், 3 டி-20 ஆட்டங்கள் டெல்லி, கட்டாக், ராஜ்கோட்டிலும் விளையாடப்பட உள்ளன.

அதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொல்கத்தா, நாகபுரி, டெல்லியிலும், மூன்று ஒருநாள் ஆட்டங்கள் தர்மசாலா, மொஹாலி, விசாகப்பட்டினத்திலும் நடைபெறும். 3 டி-20 ஆட்டங்கள் கொச்சி அல்லது திருவனந்தபுரம், இந்தூர், மும்பையில் நடைபெறும்.

இந்தப் போட்டிக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இதனிடையே, ரஞ்சி கோப்பை போட்டியின் ஆட்டங்கள், இரு அணிகளைச் சாராத பொதுவான இடத்தில் நடத்தப்படும் முறையை கைவிடுவதென பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அத்துடன், 28 அணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுவதற்கு பதிலாக, ஒரு 'குரூப்'-பிற்கு 7 அணிகள் வீதம் 4 குரூப்புகளாக பிரிக்கப்படவுள்ளது. எனினும், நாக் அவுட் ஆட்டங்கள் பொது இடத்திலேயே நடைபெறும்” என்று அவர் கூறினார்.