Whenever I need to rest I will ask myself - Veerat Kohli Open Dog ...

எனது உடலுக்கு எப்போது ஓய்வு தேவை என்று நான் உணருகிறேனோ, அப்போது அதை கேட்டுப் பெறுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறினார்.

வீராட் கோலி இந்த ஆண்டில் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகள், 26 ஒருநாள் ஆட்டங்கள், 10 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்தாண்டில் வேறு எந்த இந்திய வீரர்களும் இத்தனை போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோலியின் இந்தப் பணிச்சுமை குறித்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், நியூஸிலாந்திற்கு எதிரான தொடருக்குப் பிறகு அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கைக்கு எதிரான தொடரிலும் அவர் இடம் பிடித்தார்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து கோலி கூறியது: "நானும் சாதாரண மனிதன் தானே தவிர, இயந்திர மனிதன் அல்ல. எனக்கும் ஓய்வு தேவைப்படும். எனது உடலுக்கு எப்போது ஓய்வு தேவை என்று நான் உணருகிறேனோ, அப்போது அதை கேட்டுப் பெறுவேன்.

ஒரு வீரருக்கான பணிச்சுமை குறித்தும், அவருக்கு ஓய்வு அளிப்பது குறித்தும் பேசுபவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவில்லை. உதாரணமாக அனைத்து வீரர்களும் ஆண்டு ஒன்றுக்கு 40 போட்டிகளில் விளையாடுகின்றனர். டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் இருக்கும் அனைவருமே 45 ஓவர்கள் பேட்டிங் செய்வதோ, 30 ஓவர்கள் பந்துவீசுவதோ கிடையாது.

உண்மையில் வீரர்கள் அடிக்கும் ஓட்டங்கள், எடுக்கும் விக்கெட்டுகள் என களத்தில் அவர்கள் செலவிடும் நேரத்தை கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில், அனைவருமே ஒரே எண்ணிக்கையிலான ஆட்டத்திலேயே விளையாடுகிறோம்.

உதாரணமாக சேதேஷ்வர் புஜாராவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடுகிறார். அவரது ஆட்டத்தை, அதிரடியாக ஆடும் ஒரு வீரருடன் ஒப்பிடக் கூடாது. ஏனெனில், அந்த வீரரின் பணிச்சுமை குறைவானதாக இருக்கும்.

முக்கியமான போட்டிகளின்போது, முக்கியமான வீரர்களுக்கு ஓய்வளிக்க முடியாது" என்று அவர் கூறினார்.