When a football player played a heart attack

கால்பந்து விளையாடியபோது சகவீரருடன் மோதியதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த மூத்த கோல் கீப்பரான கோய்ரூல் ஹூடா மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 

இந்தோனேசியாவைச் சேர்ந்த மூத்த கோல் கீப்பர் கோய்ரூல் ஹூடா (38). இவர் தனது சொந்த ஊரான கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள பெர்செலா கிளப்புக்காக கால்பந்து விளையாடி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பங்கேற்ற ஹூடாவும், அவருடைய சகவீரரான ரேமான் ரோட்ரிகஸும் நேருக்கு நேர் மோதினர். இதில் ஹூடாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஹூடாவுக்கு அடிபட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் நெஞ்சு வலியால் துடித்தது, மைதானத்தில் இருந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மருத்துவர்கள், “ஹூடா, சகவீரருடன் மோதியபோது, அவருடைய கழுத்திலும், தலையிலும் அடிபட்டிருக்கலாம். அது மார்பு பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தனர்.

“ஹூடா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு சில நிமிடங்கள் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றார் பெர்செலா கிளப்பின் உதவிப் பயிற்சியாளர் யூரோனர் எஃபென்டி.