what is the reason for csk being a successful team in ipl
சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு அணி நிர்வாகம் முழு சுதந்திரம் கொடுத்ததால் தான் அந்த அணி, ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது என காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத டெல்லி அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் காம்பீரின் தலைமையில் களம் கண்டது. கொல்கத்தா அணிக்கு இரண்டுமுறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றி கேப்டனான காம்பீரின் கேப்டன்சியும் ஆட்டமும் இந்த முறை எடுபடவில்லை. கேப்டனாகவும் வீரராகவும் சோபிக்காத காம்பீர், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு நடந்த எந்த போட்டியிலும் ஆடவில்லை.
காம்பீர் விலகிய பிறகு டெல்லி அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக்கப்பட்டார். ஆனால், டெல்லி அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
டெல்லி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பது ஒருபுறமிருக்க, இதுவரை ஐபிஎல் இறுதி போட்டிக்குள் நுழையாத ஒரே அணியும் டெல்லி தான். அதற்கு நேர்மாறாக சென்னை அணி திகழ்கிறது. இதுவரை 7 இறுதி போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி, 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே விளங்குகிறது.
இந்நிலையில், மற்ற அணிகளை காட்டிலும் ஐபிஎல்லில் சென்னை அணி சிறந்து விளங்குவதற்கான காரணம் குறித்து காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஐபிஎல் அதிகமான பணம் புழங்கும் தொழிலாக உள்ளது. இதில் முதலீடு செய்துள்ள அணி உரிமையாளர்கள், முதலீடு செய்ததை எடுப்பதில் குறியாக உள்ளனர். போட்டி தொடர்பான விவகாரங்களில் அணி உரிமையாளர்களின் ஆதிக்கமும் தலையீடும் இருந்தால், அதை உங்களால் உங்களால் அவர்களை குறைகூற முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் ஐபிஎல் அணிகளில் சென்னை அணியில் மட்டும் தான் அணி நிர்வாகிகளின் தலையீடு கிடையாது. அந்த அணிக்கு எல்லாமே தோனி தான். தோனி எடுப்பதுதான் முடிவு. அதில் அணி நிர்வாகத்தின் தலையீடு இருக்காது. தோனி தான் சென்னை அணியின் பாஸ். தோனிக்கு அந்த அணி முழு சுதந்திரம் கொடுத்தது தான் அந்த அணி வெற்றிகரமாக திகழ்வதற்கான காரணம் என காம்பீர் எழுதியுள்ளார்.
சென்னை அணியைப் போல மற்ற அணி உரிமையாளர்கள், கேப்டன்களுக்கு சுதந்திரம் கொடுக்காததுதான் மற்ற அணிகளை காட்டிலும் சென்னை அணி வெற்றிகரமாக திகழ்வதற்கு காரணம் என காம்பீர் குறிப்பிட்டுள்ளார்.
