what happened to leopard virat kohli
இலக்கை விரட்டுவதில் கைதேர்ந்தவர் விராட் கோலி. சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலி, இரண்டாவது பேட்டிங்கின் போது, சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை கோலி தேடித்தந்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இரண்டாவது பேட்டிங்கில் கோலி சதமடித்த 90% போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இலக்கு என்னவாக இருந்தாலும், அதை திட்டமிட்டு விரட்டி வெற்றியை வசப்படுத்துவதில் கோலி வல்லவர். இலக்கை விரட்டுவதில் கோலி சிறுத்தை போன்றவர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் ஏற்கனவே புகழ்ந்துள்ளார்.

சேஸிங் மாஸ்டராக கிரிக்கெட் ரசிகர்களாலும் கிரிக்கெட்டர்களாலும் அறியப்படும் கோலி, இந்த ஐபிஎல் சீசனில், இலக்கை விரட்டி வெற்றியை வசப்படுத்த தவறிவிட்டார்.
இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட வென்றிராத மூன்று அணிகளில் ஒன்றான பெங்களூரு, இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. ஆனால் மிஞ்சியது என்னவோ வழக்கம்போல ஏமாற்றம்தான்.
இதுவரை 10 போட்டிகளில் ஆடி 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி, 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது.
இலக்கை விரட்டுவதில் கைதேர்ந்த கோலி, ஐபிஎல் போட்டிகளில் இலக்கை வெற்றிகரமாக விரட்ட தவறிவிட்டார். இதுவரை ஆடியுள்ள 10 போட்டிகளில் 3ல் வெற்றி; 7ல் தோல்வி. இந்த 7 தோல்விகளில் இலக்கை விரட்ட முடியாமல் 3 போட்டிகளில் பெங்களூரு அணி தோற்றுள்ளது.

3 வெற்றிகளில் 2 முறை இலக்கை விரட்டி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் டிவில்லியர்ஸ் அதிரடி அரைசதம் அடித்திருக்கிறார். டெல்லிக்கு எதிரான போட்டியிலும் பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியிலும் டிவில்லியர்ஸின் அதிரடியால் பெங்களூரு அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலுமே ஓரளவிற்கு கோலி பங்களிப்பை அளித்திருந்தாலும், பெரிதாக சோபிக்கவில்லை. டெல்லிக்கு எதிரான போட்டியில் டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடவில்லை என்றால் வெற்றி சாத்தியப்பட்டிருக்காது.
வெற்றி பெற்ற போட்டிகளில் கோலி பெரிதாக பங்காற்றாவிட்டாலும், இலக்கை எட்டமுடியாமல் தோற்ற மூன்று போட்டிகளிலுமே கோலி, சிறப்பாகவே ஆடியிருக்கிறார். ஆனால், இறுதிவரை களத்தில் நின்று கோலி வெற்றியை உறுதி செய்யவில்லை.

மும்பை நிர்ணயித்த 213 ரன்கள் என்ற இலக்கு மிகவும் கடினமானது. அதில், 46 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்றது. ராஜஸ்தான் நிர்ணயித்த 218 ரன்கள் என்ற கடின இலக்கையும் பெங்களூருவால் எட்ட முடியவில்லை. இவை இரண்டும் கூட கடினமான இலக்கு. அதனால் எட்டுவது கடினம். ஆனால், ஹைதராபாத் நிர்ணயித்த 147 என்ற எளிய இலக்கை பெங்களூருவால் எட்ட முடியவில்லை. ஹைதராபாத் சிறந்த பவுலிங் அணிதான்; இதைவிட குறைந்த ஸ்கோரையே டிஃபெண்ட் செய்திருக்கிறது. எனினும் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில், ஹைதராபாத் அணி நிர்ணயித்த 147 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாதது துரதிர்ஷ்டவசமானதுதான்.
ஒருவேளை கோலி, மிகவும் சிறப்பாக ஆடி, இலக்கை விரட்டுவதில் வல்லவர் என்ற தன் மீதான நம்பிக்கையை காப்பாற்றியிருந்தால், பெங்களூரு அணி வெற்றி பெற்றிருந்திருக்கலாம். பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்திருந்திருக்கலாம். என்ன ஆயிற்று இலக்கை விரட்டும் சிறுத்தையான கோலிக்கு..? என ரசிகர்கள் வருத்தத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
