இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் முதன்முறையாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்றுள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. 

முதல் நான்கு போட்டிகளிலும் டாஸ் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், இந்த போட்டியில் முதன்முறையாக டாஸ் ஜெயித்துள்ளார். எல்லா போட்டிகளிலுமே ஹெட் கேட்டு டாஸ் தோற்ற ஹோல்டர், இந்த முறை ஹெட் கேட்டு ஜெயித்துவிட்டார். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர், முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகின்றன. அதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

இன்றைய போட்டியில் ஆடும் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நான்காவது போட்டியில் ஆடிய அதே அணிதான் இந்த போட்டியில் ஆடுகிறது. 

கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது.