கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 104 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது. முதல் நான்கு போட்டிகளில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. 

எனவே கடைசி போட்டியில் இந்தியா வென்றால், 3-1 என தொடரை வெல்லும். வெஸ்ட் இண்டீஸ் வென்றால், 2-2 என தொடர் சமனாகும். இப்படியான முக்கியமான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடியது. 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சியளித்தனர். முதல் ஓவரில் கிரன் பவலை புவனேஷ்வர் குமாரும் இரண்டாவது ஓவரில் ஷாய் ஹோப்பை பும்ராவும் டக் அவுட்டாக்கி அனுப்பினர். 

கலீல் அகமதுவின் பவுலிங்கில் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி, ரோமன் பவலுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற அனுபவ வீரர் சாமுவேல்ஸை 24 ரன்களில் ஜடேஜா வீழ்த்தினார். இதையடுத்து அந்த அணியின் இளம் அதிரடி வீரர் ஹெட்மயரின் விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்தினார். இதையடுத்து ரோமன் பவல், ஃபேபியன் ஆலென், ஜேசன் ஹோல்டர் என அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 32 ஓவரில் வெறும் 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.