- Home
- Sports
- Sports Cricket
- IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் காயம் ஒரு பெரிய பகுதி. அதனால், அதைப் பற்றி நாம் எதுவும் செய்ய முடியாது. அது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்று வீரர்கள் காயம் குறித்தும் சூர்யகுமார் பேசினார்.

சூர்யகுமார் யாதவ் மோசமான ஃபார்ம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்னதாக, இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது மோசமான ஃபார்ம் குறித்து நம்பிக்கையுடன் பேசியுள்ளார். 2025ம் ஆண்டு சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 21 போட்டிகள் மற்றும் 19 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 13.62 என்ற சராசரியில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 47 ரன்கள் மட்டுமே.
எனது அடையாளத்தை மாற்ற விரும்பவில்லை
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை இந்தூரில் தொடங்கும் நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூர்யகுமார், ''ஒரு தொடரில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. அதில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம்.
நான் வலைப்பயிற்சியில் நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். ரன்களைப் பற்றி பேசினால், அது நிச்சயம் வரும். ஆனால் அதே நேரத்தில், நான் வித்தியாசமாக எதையும் செய்ய முடியாது. எனது அடையாளத்தை மாற்ற விரும்பவில்லை.
கடந்த 3-4 ஆண்டுகளில் எனக்கு வெற்றியைத் தந்தது எதுவோ, அதே வழியில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். செயல்திறன் வந்தால், அதை ஏற்றுக்கொள்வேன். வரவில்லை என்றால், மீண்டும் திட்டமிட்டு, பயிற்சி செய்து, கடினமாக உழைத்து, வலுவாகத் திரும்புவேன்" என்று தெரிவித்துள்ளார்.
திலக் மற்றும் வாஷிங்டனை மிஸ் செய்வோம்
காயம் காரணமாக திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ள நிலையில், அது குறித்து பேசிய சூர்யகுமார், ''விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் காயம் ஒரு பெரிய பகுதி. அதனால், அதைப் பற்றி நாம் எதுவும் செய்ய முடியாது. அது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.
ஆனால் அதே நேரத்தில், வேறு ஒருவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். நாங்கள் திலக் மற்றும் வாஷிங்டனை நிச்சயம் மிஸ் செய்வோம். அவர்கள் டி20 போட்டிகளில் விளையாடிய போதெல்லாம் இந்திய அணிக்காக நிறைய செய்திருக்கிறார்கள்.
டி20 தொடருக்கான இந்திய அணி
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர் (முதல் மூன்று டி20 போட்டிகள்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, இஷான் கிஷன், ரவி பிஷ்னோய்.

