We will reveal the normal game no matter where we are - Kohli believes ...

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா என எந்த இடத்திலும் எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.

கடந்த 25 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை இந்தியா. அதிகபட்சமாக, 2010-11 காலகட்டத்தில் இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரை 1-1 என சமன் இந்தியா செய்துள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களைக் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக அந்நாட்டுக்குச் செல்கிறது இந்திய அணி.

தென் ஆப்பிரிக்கா புறப்படுவதற்கு முன்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் கோலி கூறியது:

"அந்நிய மண்ணில் விளையாடுவது, மக்களுக்கு நிரூபிக்க வேண்டியது போன்ற மனரீதியிலான நெருக்கடிகள் எங்களுக்கு உள்ளன. உண்மையில், நாங்கள் எதையும், யாருக்கும் நிரூபிக்க விரும்பவில்லை. போட்டிகளின்போது நாட்டுக்காக 100 சதவீதம் திறமையை வெளிப்படுத்தி, எதிர்பார்க்கும் முடிவுகளை பெறுவதே எங்கள் பணியாகும்.

நாம் நிஜங்களை உணர்ந்து நடக்க வேண்டும். திட்டமிட்டவாறு விளையாடி, நல்ல முறையில் உழைத்ததன் காரணமாகவே தற்போது உள்ள இடத்துக்கு வந்துள்ளோம். சில வேளைகளில் விரும்பிய முடிவுகள் கிடைக்கலாம்; கிடைக்காமலும் போகலாம்.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா என எந்த இடத்திலும் எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இருப்பினும், சவாலான சூழ்நிலைகள் இருக்கும் இடங்களில் விளையாடும்போது திருப்தி கிடைக்கிறது.

பேட்ஸ்மேனாக களம் காணும்போது மனநிலையை பொருத்தே அனைத்தும் இருக்கிறது. நல்லதொரு மனநிலையுடன் இல்லாவிட்டால் எந்த இடமும் ஏன், இந்திய மண்ணில் ஆடும்போது கூட கடினமாகத் தான் தெரியும். மனோரீதியாக சவாலுக்குத் தயாராகும்போது, அந்நிய மண்ணில் விளையாடுவது கூட சொந்த மண்ணில் விளையாடுவதைப் போலவே தோன்றும்.

நான், புஜாரா, ரஹானே ஆகியோர் தென் ஆப்பிரிக்காவில் ஒரே முறைதான் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளோம். எனவே, இந்தத் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்கள் என அனைவருமே தற்போது அதிக அனுபவத்துடன் உள்ளனர். ஆனால், வெற்றிக்கான தேடல் அதேபோலத்தான் உள்ளது.

கடந்த முறை தென் ஆப்பிரிக்காவில் திட்டமிட்டு செய்ய முடியாமல் போனதை, இம்முறை செயல்படுத்த விரும்புகிறோம" என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.