Asianet News TamilAsianet News Tamil

தமிழருக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானியர்!! வாஸ்தவமான கேள்வி கேட்கும் வாசிம் அக்ரம்

wasim akram questioned rohit and dhawan salary
wasim akram questioned rohit and dhawan salary
Author
First Published Mar 12, 2018, 3:21 PM IST


டெஸ்ட் அணியில் நிரந்தரமாக விளையாடாத ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை ஏ+ கிரேடில் பிசிசிஐ கொண்டுவந்தது தொடர்பாக வாசிம் அக்ரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டது. எப்போதும் ஏ, பி, சி என மூன்று நிலைகளில் வீரர்கள் தரம்பிரிக்கப்படுவர். ஆனால் இந்தமுறை “ஏ+” என்ற கிரேடு உருவாக்கப்பட்டு, அதில் கோலி, ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய 5 வீரர்களும் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு ரூ.7 கோடி ஊதியம். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் இந்த 5 வீரர்களும் ஆடுவதால், அவர்கள் ஏ+ கிரேடில் உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், தோனி ஏ கிரேடில் உள்ளார். டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பெற்றுள்ள அஸ்வின், ஜடேஜா, புஜாரா ஆகிய வீரர்களும் ஏ கிரேடில் உள்ளனர். இவர்களுக்கு ரூ.5 கோடி ஊதியம்.

இந்நிலையில், இந்திய அணியின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் நிரந்தரமாக இடம்பெறுவதில்லை. சிறந்த டெஸ்ட் வீரராக இருவரும் தங்களை நிரூபிக்கவில்லை. அதேபோல, புவனேஷ்வர் குமாரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் சேர்க்கப்படுவதில்லை. பந்து ஸ்விங் ஆகும் களங்களில் மட்டுமே புவனேஷ் இறக்கப்படுகிறார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில்தான் பும்ரா அறிமுகமே ஆனார். அப்படியிருக்கையில், ஷிகர் தவான், ரோஹித் சர்மா, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய 4 வீரர்களும் ஏ+ கிரேடில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏ+ கிரேடில் உள்ள வீரர்களில், கோலி மட்டுமே நிரந்தரமாக மூன்று கிரிக்கெட்டிலும் விளையாடிவருகிறார்.

ரோஹித், தவான் ஆகியோருக்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதைவிட பிரத்யேக டெஸ்ட் வீரர்களுக்குத்தான் அதிக ஊதியம் வழங்கப்பட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் தான் கடினமான ஒன்று. டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது, பவுன்சர் பந்துகளால் பேட்ஸ்மேன்களின் தலை மற்றும் விரல்களில் காயம் ஏற்படும். நிலைத்து ஆடி அதிக ரன்கள் குவிக்க வேண்டும். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் பவுலர்களும் அதிகநேரம் பவுலிங் செய்ய வேண்டும். 

எனவே தற்போது ஏ+ கிரேடில் உள்ள வீரர்களை விட அஸ்வின், புஜாரா ஆகிய டெஸ்ட் வீரர்களுக்குத்தான் அதிக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தனது கருத்தை வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios