washington sundar opinion about this ipl season

கடந்த ஆண்டு புனே அணிக்காக தோனியுடனும் இந்த ஐபிஎல் சீசனில் கோலி தலைமையில் பெங்களூரு அணிக்காக ஆடியபோதும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதாக தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர், கடந்த ஐபிஎல் சீசனில் புனே அணிக்காக தோனியுடன் விளையாடினார். இந்த சீசனில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் ஆடினார். இந்த சீசனில் பெங்களூரு அணியின் ஆடும் லெவனில் அனைத்து போட்டிகளிலும் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 7 போட்டிகளில் மட்டுமே பெங்களூரு அணிக்காக ஆடினார்.

7 போட்டிகளில் ஆடி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சுந்தர், 6 போட்டியில் பேட்டிங் பிடித்து 65 ரன்கள் எடுத்தார். அவருக்கு பல போட்டிகளில் 4 ஓவர்களையும் முழுமையாக வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்டிங்கிலும் கடைசி வரிசையில் இறங்கியதால் பெரியளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. ஆனால் பேட்டிங்கில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார்.

இந்நிலையில், இந்த சீசன் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வாஷிங்டன் சுந்தர், ஆடும் லெவனில் இடம்பெறுவதும் இல்லாமல் போவதும் பெரிய பிரச்னை இல்லை. ஏனென்றால் அது அணி தேர்வைப் பொறுத்தது. 4 வெளிநாட்டு வீரர்கள், அணி கலவை ஆகியவற்றைப் பொறுத்தே வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதனால் அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு கிடைக்காமல் போனது, எனக்கு எந்த ஏமாற்றத்தையும் அளிக்கவில்லை. 

இதுபோன்ற நீண்ட தொடரில் ஆடும்போது நிறைய கற்றுக்கொள்ள முடியும். நானும் நிறைய கற்றுக்கொண்டேன். கோலி தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது. கேப்டனாக அவர் பல விஷயங்களைச் சொன்னார். அதன்படி பந்து வீசினேன். கோலியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். கடந்த ஆண்டு தோனியுடன் ஆடினேன். அப்போதும் நிறைய கற்றுக்கொண்டேன். மூத்த வீரர்களுடன் ஆடும்போது அதிகபட்சமான விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். இங்கிலாந்து தொடருக்கு தேர்வாகியிருக்கிறேன். இதற்கு முன் நான் அங்கு ஆடியதில்லை. அங்குள்ள சூழலுக்கு ஏற்ப பந்துவீச பயிற்சி எடுத்து வருகிறேன் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.