இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் இன்னின்ஸில் 16.1 ஓவரின் போது மழை குறுக்கிட்டது. அப்போதைக்கு அந்த அணி 153 ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட பிறகு எஞ்சிய 5 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17 ஓவர் முடிவில் அந்த அணி 158 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து டக்வொர்த் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தவான் 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இலக்கை விரட்ட முயன்றார். எனினும் இந்திய அணி 17 ஓவர் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.

இந்த போட்டியில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சொதப்பினார் குருணல் பாண்டியா. குருணலின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் மேக்ஸ்வெல். குருணல் பாண்டியா வீசிய 14வது ஓவரில் 23 ரன்களையும் 16வது ஓவரில் 17 ரன்களையும் வாரி வழங்கினார். மொத்தமாக 4 ஓவர்கள் வீசி 55 ரன்களை வாரி வழங்கிய குருணல் பாண்டியா, டி20 போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய இந்திய பவுலர்களின் பட்டியலில் மூன்றாமிடத்தை பிடித்தார். 

பவுலிங்கில்தான் சொதப்பினார் என்று பார்த்தால், பேட்டிங்கிலும் முடிந்தவரை சொதப்பிவிட்டுத்தான் சென்றார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரில் அவர் அவுட்டான பந்துடன் சேர்த்து 3 பந்துகளை வீணாக்கி 2 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டையும் பறிகொடுத்தார். அதனால் போட்டி தலைகீழாக திரும்பியது. 

இவ்வாறு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் சொதப்பினார் குருணல். அவரது பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. எனவே அடுத்த போட்டியில் குருணலுக்கு பதிலாக தமிழ்நாட்டு வீரரான வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.