சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் வியூகம் கூறியுள்ளார். 

உலகின் தலைசிறந்த வீரராக வலம்வந்து கொண்டிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். கிரிக்கெட்டில் பேட்டிங்கில் படைப்பட்டிருக்கும் பல சாதனைகளை முறியடித்து கொண்டே இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை எல்லாம் கூட விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் முறியடித்துவிடுவார் என எதிர்பாக்கப்படுகிறது. 

இந்திய அணியின் அசைக்கமுடியாத சக்தியாகவும் உலகின் தலைசிறந்த வீரராகவும் திகழும் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது ஒவ்வொரு பவுலரின் கனவாக உள்ளது. குறிப்பாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த இளம் பவுலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியை தானாக இருந்தால் எப்படி வீழ்த்தியிருப்பேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் விளக்கியுள்ளார். கலீஜ் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்து விளக்கியுள்ளார். 

இதுதொடர்பாக பேசியுள்ள வக்கார் யூனிஸ், எந்த ஒரு வீரருக்கும் பலகீனம் இருக்கும். விராட் கோலிக்கும் இருக்கிறது. விராட் கோலி, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசினால், பந்து வருவதற்கு முன்னதாகவே டிரைவ் ஆடுவார் கோலி. கோலிக்கு பந்துவீசும்போது பவுலர்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும். உண்மையாகவே அவருக்கு சவால் விட முடியாது. எனவே உங்களது திட்டங்களில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

கோலியை வீழ்த்த சிறந்த திட்டம் எதுவென்றால், நீங்கள் என்னை போன்ற அவுட்ஸ்விங் பவுலராக இருந்தால், அவருக்கு ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஷார்ட் ஆஃப் லெந்த்தில் வீசி அவரை டிரைவ் ஆட வைக்க வேண்டும் என வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். 

வக்கார் யூனிஸ் கூறியதன்படியே விராட் கோலியும் ஆஃப் திசையில் டிரைவ் ஆட முற்பட்டு அவுட்சைடு எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து அவுட்டாகியுள்ளார்.