இலண்டன்
இலண்டன் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
முன்னதாக, இந்தப் போட்டியின் 9-ஆவது மற்றும் இறுதிச்சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் - ரஷியாவின் விளாதிமீர் கிராம்னிக் மோதிய ஆட்டம் 5-5 என்ற புள்ளிகள் கணக்கில் டிரா ஆனது.
இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ஆனந்த், "உலகக் கோப்பை போட்டியில் நிச்சயம் விளையாடுவேன். ஏனெனில், கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்பதற்காக எனக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதுதான். அதை மிகவும் அனுபவித்து விளையாட உள்ளேன்' என்றார்.
இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் வெஸ்லே - பிரான்சின் மேக்சிம் வச்சியருக்கு எதிராக சமன் செய்தார். பல்கேரியாவின் வெஸ்லின் டோபாலோவ் ஆர்மேனியாவின் லிவோன் ஆரோனியனை தோற்கடித்தார்.
நெதர்லாந்தின் அனிஷ் கிரி-அமெரிக்காவின் ஃபாபியானோ கரோனா, அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா-இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் ஆகியோர் இடையேயான ஆட்டமும் டிரா ஆனது.
போட்டியின் முடிவில் அமெரிக்காவின் வெஸ்லே 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். சகநாட்டவரான ஃபாபியானோ கரோனா 5.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தார். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் விளாதிமீர் கிராம்னிக், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா ஆகியோர் 5 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
