நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. 

முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. நேப்பியரில் நேற்று நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றதையடுத்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. இன்னும் 4 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ஆகியவற்றில் தொடர்ந்து ஆடிவரும் கோலி, அடுத்ததாக இந்தியாவில் நடக்கும் ஆஸ்திரேலிய தொடரும் ஆட உள்ளார். எனவே தொடர்ந்து ஆடிவரும்அவருக்கு ஓய்வு வழங்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் ஒரு கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி செல்வதால் கூடுதல் அழுத்தம் அவர் மீது இருக்கும். எனவே உடலளவிலும் மனதளவிலும் ஓய்வு தேவை என்பதால் அவருக்கு கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ஷுப்மன் கில், கோலியின் இடத்தில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.