virat kohli takes place in highly paid sportsmen list of forbes

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இடம்பிடித்துள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். சச்சினின் பெரும்பாலான சாதனைகளை நெருங்கிவிட்டார் கோலி. இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சக்தியாக கோலி விளங்குகிறார்.

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை, சர்வதேச அளவில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் குறித்த ஆய்வை நடத்தி, வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 வீரர்கள் கொண்ட பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய வீரர் விராட் கோலி தான். ஓராண்டிற்கு விராட் கோலி, ரூ. 160.95 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கோலி 83வது இடத்தை பிடித்துள்ளார்.

பூமா, பெப்சி, ஆடி, ஆக்லே உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும், மேலும் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து விராட் கோலி வருமானம் ஈட்டி வருகிறார். 

இந்த பட்டியலில் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான பிளாய்டு மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் இவர், ரூ.1900 கோடி சம்பாதித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரபல கால்பந்து வீரர்களான ரொனால்டோ, மெஸ்சி உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.