Virat Kohli surpasses Brian Lara for most double centuries as captain
டெல்லியில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இரட்டை சதம் அடித்து, மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று முதல் இருந்து நடந்து வருகிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் கோலி 156 ரன்களுடனும், ரோகித்சர்மா 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அதிரடியாக ஆடிய விராத் கோலி, சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 6-வது இரட்டை சதத்தை 238 பந்துகளில் நிறைவு செய்தார். இந்த இரட்டை சதத்தோடு பல சாதனைகளையும் விராத் கோலி புரிந்துள்ளார்.
1. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தொடர்ந்து ஹாட்ரிக் சதம் அடித்த முதல் கேப்டன் எனும் பெருமயை விராத் கோலி பெற்றார்.
2. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6 இரட்டை சதங்கள் அடித்த முதல் கேப்டன் எனும் பெருமையையும் விராத் கோலி தட்டிச் சென்றார்.
3. டெஸ்ட் அரங்கில் விராத் கோலி அடிக்கும் 6-வது இரட்டை சதம் இதுவாகும். இதன் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவின் 5 இரட்டை சதங்கள் சாதனையை விராத் கோலி முறியடித்துள்ளார்.
4. இதுவரை இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி மட்டுமே தொடர்ந்து இரு போட்டிகளில் இரட்டை சதம் அடித்து இருந்தார். அவருக்கு அடுத்தார்போல், இப்போது விராத் கோலி தொடர்ந்து இரட்டை சதம் அடித்துள்ளார்.
5. அதோடுமட்டுமல்லாமல், அதிகமான இரட்டை சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோருடன் விராத் கோலி இப்போது இணைந்துவிட்டார். இதில் சச்சின் 6 இரட்டை சதங்களும், விரேந்திர சேவாக் 4 இரட்டை சதங்களும், 2 முச்சதங்களும் அடித்துள்ளார்.
6. டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய 11-வது இந்திய வீரர் எனும் பெருமையையும், அதிகவேகமாக 5 ஆயிரம் ரன்களை எட்டிய 4-வது வீரர் எனும் சாதனையையும் விராத் கோலி பெற்றார். இதற்கு முன் சுனில் கவாஸ்கர் 95 போட்டிகளிலும், சேவாக் 99 போட்டிகளிலும், சச்சின் 103 போட்டிகளிலும் 5 ஆயிரம் ரன்களை எட்டிய நிலையில், விராத் கோலி 63-வது டெஸ்ட்களில் 105 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்தார்.
7. அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை எட்டியதில், தற்போது விளையாடி வரும் வீரர்களில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முன்னனியில் இருக்கிறார். அவர் 97 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை எட்டினார்.
8. அதற்கு அடுத்தார்போல், இங்கிலாந்து வீரர் ஜோய் ரூட் 105 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை எட்டியதே சாதனையாக இருக்கிறது. அவரோடு, விராத் கோலியும் இணைந்துகொண்டார்.
9. தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா, ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் 109 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களும், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 110 இன்னிங்ஸ்களிலும் 5 ஆயிரம் ரன்களை அடைந்துள்ளனர்.
10. ஒட்டுமொத்தமாக டான் பிராட் மேன் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. அவர் 56 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார்.
