ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழை குறுக்கீட்டால் முடிவின்றி கைவிடப்பட்டது. இதையடுத்து நேற்று சிட்னியில் நடந்த கடைசி டி20 போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவருக்கு 164 ரன்களை எடுத்தது. சிறப்பாக தொடங்கிய அந்த அணியின் பேட்டிங் வரிசையை குருணல் பாண்டியா சரித்தார். இந்திய அணியின் சார்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் குருணல் பாண்டியா.

165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவானும் ரோஹித் சர்மாவும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய தவான், 22 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என மொத்தம் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும் பின்வரிசை வீரர்களின் வேலையை எளிமையாக்கி கொடுத்தனர். அதன்பிறகு கோலியும் தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்தனர். 

இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனானது. போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித்தும் தவானும் எங்கள் வேலையை எளிதாக்கிவிட்டனர். போட்டியின் இடையில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் பின் மீண்டெழுவதுதான் டி20 கிரிக்கெட். கடைசி ஓவர்களில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக பேட்டிங் செய்தார். மேக்ஸ்வெல்லும் ஸாம்பாவும் சிறப்பாக பந்துவீசினர். ஒட்டுமொத்தமாக திறமையின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி இன்று சிறந்து விளங்கியது என்று கோலி தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவை விட திறமையில் சிறந்து விளங்கினோம் என்று வெற்றி பெற்றதுமே அலப்பறையை கூட்டிவிட்டார் கோலி.