கொல்கத்தாவுடன் மோதிய ஆட்டத்தில் வெறும் 49 ஓட்டங்கள் பெற்று படுதோல்வி அடைந்த பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, “நாங்கள் சிறந்த அணி. தோல்வியை மறந்துவிட்டு, அடுத்த ஆட்டத்தை நோக்கி செல்வது அவசியம்” என்று கெத்து காண்பிக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா 19.3 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இதனையடுத்து 132 ஓட்டங்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

இந்த 49 ஓட்டங்கள்தான் ஐபிஎல் வரலாற்றிலேயே ஓர் அணியால் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர்.

இந்த ஆட்டத்தில் பெங்களூர் வீரர்களில் ஒருவர்கூட இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறியது:

“இது எங்களுடைய மிக மோசமான பேட்டிங். இது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த ஆட்டத்தின் ஒரு பாதிக்குப் பிறகு நாங்கள் எளிதாக வென்றுவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், எங்களின் பேட்டிங் பொறுப்பற்றதாக அமைந்துவிட்டது.

தற்போதைய நிலையில் வேறு எதையும் சொல்ல முடியாது. எங்களின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டாவது பாதி ஆட்டம் குறித்து மறுஆய்வு செய்ய தேவையில்லை. இந்த தோல்வியை மறந்துவிட்டு, அடுத்த ஆட்டத்தை நோக்கி செல்வது அவசியமாகும்.

நாங்கள் சிறந்த அணி. இதற்கு முந்தைய ஆட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்தோம். எங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் தங்களின் தவறை உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

எனவே, அனைவரும் இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டும். சிறப்பாக ஆடி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும். இனிமேல் இதுபோன்று நாங்கள் ஆடமாட்டோம் என்பது மட்டும் உறுதி” என்று தோல்வியடைந்த வேதனையுடன் தெரிவித்தார்.