Asianet News TamilAsianet News Tamil

கோலியா இப்படி செய்தார்..? ரூ.12 லட்சம் அபராதம்

virat kohli fined for slow over rate
virat kohli fined for slow over rate
Author
First Published Apr 26, 2018, 1:38 PM IST


ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலியும் டிகாக்கும் களமிறங்கினர். கோலி 18 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து டிகாக்கும் டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்தனர். சென்னை அணியின் பந்து வீச்சை இந்த ஜோடி சரமாரியாக அடித்து நொறுக்கியது. டிவில்லியர்ஸ் மீண்டும் ருத்ர தாண்டவம் ஆட தொடங்கினார். அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆட, அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே டிகாக் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் தொடர்ந்து அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ், 30 பந்துகளில் 68 ரன்கள் அடித்து வெளியேறினார்.

இதையடுத்து ரன்ரேட் சற்று குறைய தொடங்கியது. எனினும் மந்தீப் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி, 205 ரன்கள் குவித்தது.

206 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின், வாட்சன், ரெய்னா, பில்லிங்ஸ், ஜடேஜா ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 74 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் ராயுடு நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடிவந்தார். 4 விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு ராயுடுவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். களத்திற்கு வந்த தோனி, 2வது பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரட்டினார்.

அதன்பிறகு தோனியும் ராயுடுவும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தோனி, 34 பந்துகளுக்கு 70 ரன்கள் குவித்து சென்னை அணியை வெற்றியடைய செய்தார். 

14வது ஓவருக்கு மேல் போட்டியின் போக்கே மாறியது. தோனி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். பெங்களூருவிடம் இருந்து மெது மெதுவாக வெற்றி, சென்னை அணியின் பக்கம் திரும்பியது. அந்த சமயத்தில் பவுலர்களுக்கு கேப்டன் கோலி அதிக முறை ஆலோசனை கூறினார். அந்த ஆலோசனைகள் பலனளிக்கவில்லை என்பது மறுபுறம் இருந்தாலும், இவ்வாறு ஆலோசனைகள் கூறியதில் அதிக நேரம் செலவழிக்கப்பட்டதால், பந்துவீச அதிகமான நேரம் எடுத்துக்கொண்டது பெங்களூரு அணி.

பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமான நேரம் எடுத்துக்கொள்வது ஐபிஎல் விதிக்கு எதிரானது. எனவே பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக பெங்களூரு அணியின் கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios