போட்டிக்கு போட்டி சாதனைகளை குவித்துவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை என்றாலும் சாதனை படைக்க தவறவில்லை.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கோலி சரியாக ஆடவில்லை.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் கோலியை பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் வீழ்த்திவிட்டனர். முதல் இன்னிங்ஸில் வெறும் 3 ரன்னில் அவுட்டான கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அடித்த ரன்களின் மூலம் ஆஸ்திரேலியாவில் 1000 ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், ராகுல் டிராவிட் ஆகிய மூன்று ஜாம்பவான்களுக்கும் அடுத்தபடியாக ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் விராட் கோலி.

அதேபோல இந்தியாவிற்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை கடந்த ஒரே இந்திய கேப்டன் விராட் கோலிதான். இவ்வாறு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும் சாதனை படைக்க தவறவில்லை.