ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோலி மற்றும் ரஹானே ஆகிய இருவரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 326 ரன்களை எடுத்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜயும் ராகுலும் இந்த போட்டியிலும் சொதப்பினர். இருவரும் வழக்கம்போலவே வந்ததும் சென்றனர். முரளி விஜயை ரன் ஏதும் எடுக்கவிடாமல் ஸ்டார்க் கிளீன் போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து ராகுல் 2 ரன்னில் ஹேசில்வுட் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 

8 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை கோலியும் புஜாராவும் சேர்ந்து மீட்டெடுத்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். எனினும் புஜாரா 24 ரன்களில் ஸ்டார்க்கிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 

இதையடுத்து கோலியுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். ரஹானே களத்திற்கு வந்தது முதலே ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடினார். தொடக்கத்தில் அடித்து ஆடினாலும் பின்னர் நிதானத்தை கடைபிடித்தார். எனினும் அவ்வப்போது பவுண்டரி அடிக்க தவறவில்லை. இதற்கிடையே அரைசதம் கடந்த விராட் கோலி, தொடர்ந்து சிறப்பாக ஆடி, 80 ரன்களை கடந்தார். கோலியை தொடர்ந்து ரஹானேவும் அரைசதம் கடந்தார். 

கோலி மற்றும் ரஹானே ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை குவித்தது. கோலி 82 ரன்களுடனும் ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.