நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது ராயுடுவிற்கு கோலி ஆலோசனை சொன்ன வீடியோ வைரலாகிவருகிறது. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகித்த நிலையில், மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. தொடரை இழக்காமல் இருப்பதற்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங் ஆடியது. வழக்கம்போலவே அந்த அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பினர். வில்லியம்சனை அபாரமான கேட்ச்சின் மூலம் ஹர்திக் பாண்டியா வெளியேற்ற, அதன்பிறகு டெய்லர் - லதாம் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 243 ரன்களை எடுத்தது. 

வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணிக்கு இது எளிதான இலக்கு. ரோஹித் - கோலி, ராயுடு - தினேஷ் கார்த்திக் ஆகிய ஜோடிகளின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்றது இந்திய அணி. 

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது, ரோஹித் அவுட்டானதும் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ராயுடு. அப்போது சாண்ட்னெர் வீசிய 31வது ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரி அடித்த ராயுடு, மூன்றாவது பந்தை தடுப்பாட்டம் ஆடி சிங்கிள் ரொடேட் செய்ய நினைத்தார். அதைக்கண்ட கோலி, தடுத்து ஆடாமல் இறங்கி வந்து அடி என்று தைரியமூட்டினார். அடுத்த பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரிக்கு அனுப்பினார். ராயுடுவிற்கு கோலி ஆலோசனை சொன்ன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.