நியூசிலாந்து தொடரில் சிறப்பாக ஆடி உலக கோப்பை அணிக்கான வீரர்களில் தீவிரமாக பரிசீலிக்கப்படும் விஜய் சங்கர், தனது மோசமான அனுபவத்திற்கு பின் தான் தூங்காமல் தவித்த இரவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரின் பெயர், உலக கோப்பைக்கான அணியில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தொடர்களில் அணியில் இணைந்தார் விஜய் சங்கர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் ஆடினார். அதில் கடைசி போட்டியில் ராயுடுவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார் விஜய் சங்கர். அந்த ஆட்டம் அவர் மீதான நம்பிக்கையை அணி நிர்வாகத்துக்கு அதிகரித்தது. 

அதன்பிறகு முதல் டி20 போட்டியில் முக்கியமான இடமான மூன்றாவது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர். தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கெடுக்காமல், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் விஜய் சங்கர். 28 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது. 

பவுலிங்கில் விஜய் சங்கர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் ஓரளவிற்கு ஆடினார். ஃபீல்டிங்கும் நன்றாக செய்தார். பவுண்டரி லைனிலிருந்து நேரடியாக ஸ்டம்பை அடித்து டெய்லரை அவர் செய்த ரன் அவுட் அபாரமானது. நியூசிலாந்து தொடரில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடியிருந்தார். 

ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக அணியில் இடம்பெற்றிருந்த விஜய் சங்கர், உலக கோப்பை அணிக்கான வீரர்கள் தேர்வில் தனது பெயரையும் பரிசீலிக்கும் வண்ணம் செய்துவிட்டார். பவுலிங் போட அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்த ஒருசில வாய்ப்புகளையும் பெரிதாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றாலும் ஓரளவிற்கு வீசினார். ஆனால் பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்தார். 

விஜய் சங்கர் நியூசிலாந்து தொடரில் நன்றாக ஆடியதன் விளைவாக, உலக கோப்பை அணிக்கான 2-3 வீரர்களுக்கான பரிசீலனையில் விஜய் சங்கரின் பெயரும் உள்ளது என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

உலக கோப்பை அணிக்காக தீவிரமாக பரிசீலிக்கப்படும் விஜய் சங்கருக்கு கடந்த ஓராண்டுக்கு முன் நிதாஹஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் மோசமான அனுபவம் ஒன்று கிடைத்தது. அதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள விஜய் சங்கர், நிதாஹஸ் டிராபி இறுதி போட்டி ஒரு கொடுமையான கனவு போன்றது. அந்த போட்டிக்கு பிறகு ஒரு வாரம் நான் தூங்கவில்லை. ஆனால் அதுபோன்ற நெருக்கடியான சூழல்களை கையாள வேண்டும் என கற்றுக்கொண்டேன். அந்த மோசமான நினைவிலிருந்து வெளியே வர கடுமையாக பயிற்சி செய்வதுதான் என்பதை உணர்ந்து கடுமையாக உழைத்தேன். எனது திறமைகளை வளர்த்துக்கொண்டேன். அந்த ஒரு சம்பவம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். 

2018ம் ஆண்டு இந்தியா - இலங்கை - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. 167 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 35 ரன்கள் தேவை. அப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் முஸ்தாபிசுர் வீசிய 18வது ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை விஜய் சங்கர். முஸ்தாபிசுரின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறிய விஜய் சங்கர், முதல் நான்கு பந்துகளை கடத்திவிட்டு ஐந்தாவது பந்தில் சிங்கிள் ஓடினார். கடைசி பந்தில் மனீஷ் பாண்டே ஆட்டமிழக்க, கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் என்ற நிலை உருவானது. அந்த நிலையில், 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசி போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார் தினேஷ் கார்த்திக். கடைசி ஓவரிலும் ரன் எடுக்க முடியாமல் திணறிய விஜய் சங்கர், ஒரு பவுண்டரியை மட்டும் அடித்துவிட்டு 5வது பந்தில் அவுட்டாக, கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்படும் நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து திரில் வெற்றியை தேடிக்கொடுத்தார். அந்த போட்டியில் விஜய் சங்கர், பந்துகளை கடத்தாமல் ஆடியிருந்தால் இந்திய அணியின் வெற்றி எளிதாகியிருக்கும். அதில் விஜய் சங்கர் சரியாக ஆடவில்லை. 

அந்த சம்பவத்தை குறிப்பிட்டுத்தான், விஜய் சங்கர் அதன்பிறகு சில இரவுகள் சரியாக தூங்கவில்லை என்று அந்த சம்பவம் மோசமான அனுபவமாக அமைந்ததாகவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

அந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில், தற்போது தனது மோசமான அடையாளத்தை மறைத்து தனது திறமையை நிரூபித்துள்ள விஜய் சங்கர், உலக கோப்பையில் இடம்பெறுவதற்கான பரிசீலனை வரை வளர்ந்துவிட்டார். அவர் உலக கோப்பை அணியில் இடம்பெறாவிட்டாலும் கூட, இந்தளவிற்கு வளர்ந்ததே மிகப்பெரிய விஷயம்தான்.