இந்தியாவில் வங்கிகளில் பண மோசடி செய்துவிட்டு இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை காண வந்த வீடியோ வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பி சென்றுவிட்டார் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத விஜய் மல்லையா, இங்கிலாந்தில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்தார் விஜய் மல்லையா. அந்த புகைப்படம் வைரலானது. 

இந்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை காண விஜய் மல்லையா வந்துள்ளார். அவர் மைதானத்திற்கு நுழையும் வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பண மோசடியில் ஈடுபட்டவர் போன்றா இருக்கிறார்..? எதைப்பற்றியுமே கவலைகொள்ளாமல் மகிழ்ந்து வாழ்கிறார் மல்லையா.