விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்நாடகம் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செளராஷ்டிரத்தை வீழ்த்தி சாம்பியன் வென்றது.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கர்நாடகம் 45.5 ஓவர்களில் 253 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்து ஆடிய செளராஷ்டிரம் 46.3 ஓவர்களில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்ற செளராஷ்டிரம் முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த கர்நாடக அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான கருண் நாயர், லோகேஷ் ராகுல் டக் அவுட்டாகினர்.

நாயருடன் வந்த மயங்க் அகர்வால் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். அவரோடு இணைந்த ரவிகுமார் சமர்த் விக்கெட் சரிவை தடுத்து 48 ஓட்டங்கள் அடித்தார். சதத்தை நெருங்கிய மயங்க் அகர்வால், 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 90 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த பவன் தேஷ்பாண்டே 49 ஓட்டங்களில் வெளியேற, தொடர்ந்து வந்த ஸ்டூவர்ட் பின்னி 5 ஓட்டங்கள், ஷ்ரேயஸ் கோபால் 31 ஓட்டங்கள் , கிருஷ்ணப்பா கெளதம் 9 ஓட்டங்கள் , ஸ்ரீநாத் அரவிந்த் 13 ஓட்டங்களில் ஆட்டமிந்தார். பிரசித் கிருஷ்ணா டக் அவுட் ஆனார்.

செளராஷ்டிர அணியில் கமலேஷ் மக்னவா 4 விக்கெட்கள், பிரேரக் மன்கத் 2 விக்கெட்கள், தர்மேந்திர சிங் ஜடேஜா, ஷெளரியா சனந்தியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய செளராஷ்டிர அணியில் கேப்டன் சேதேஷ்வர் புஜாரா மட்டும் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 90 ஓட்டங்கள் விளாசினார்.

அவி பேரட் 30 ஓட்டங்கள் , சிரக் ஜானி 22 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, இதர விக்கெட்டுகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தன. பிரேரக் மன்கத், அர்பித் வசவதா, ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

கர்நாடக தரப்பில் பிரசித் கிருஷ்ணா, கிருஷ்ணப்பா கெளதம் ஆகியோர் தலா 3, ஸ்டூவர்ட் பின்னி, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் ஆனார்.

இறுதி ஆட்டத்தில் கர்நாடகம் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செளராஷ்டிரத்தை தோற்கடித்து சாம்பியன் வென்று கர்ஜித்தது.