Vijay Hazare Trophy Victory for Tamil Nadu
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் சி பிரிவில் ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற தமிழகம் பந்துவீசத் தீர்மானித்ததை அடுத்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களி மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சேத்தன் பிஸ்ட் 51 பந்துகளில் 36 ஓட்டங்களும், அர்ஜித் குப்தா 44 பந்துகளில் 27 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இவ்வாறு 38.2 ஓவர்களில் அந்த அணி 141 ஓட்டங்கள் எடுத்தது.
தமிழகம் சார்பில் ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெகதீசன் கௌசிக், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரஹில் ஷா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர், 142 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களம் இறங்கிய தமிழகம் 23.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழகம் சார்பில் கேப்டன் பாபா அபராஜித் 55 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜெகதீசன் 39 ஓட்டங்களும், கங்கா ஸ்ரீதர் ராஜு 28 ஓட்டங்களும், கௌசிக் காந்தி 3 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாலசந்தர் அஸ்வின் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குரூப் சி பிரிவில் 24 புள்ளிகளுடன் ஆந்திரம் முதலிடத்திலும், 16 புள்ளிகளுடன் மும்பை 2-ஆவது இடத்தையும் பிடித்தன. இந்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
குரூப் சி பிரிவில், 8 புள்ளிகளுடன் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
