இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த வெங்கடேஷ் பிரசாத், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த வெங்கடேஷ் பிரசாத், தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார்.

வெங்கடேஷ் பிரசாத் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்ததாக கூறப்படும் போதிலும், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கும் விவகாரம் காரணமாக இந்த முடிவை மேற்கொண்டதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர், 'பிரசாத்தின் முடிவுக்கான தெளிவான காரணம் தெரியவரவில்லை. எனினும், ஐபிஎல் அணிகள் ஏதேனும் ஒன்றில் அவர் இணைய வாய்ப்புள்ளதால், 'ஆதாயம் தரும் இரட்டைப் பதவி' விவகாரத்தை தவிர்க்கும் வகையில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது" என்று கூறினார்.

வெங்கடேஷ் பிரசாத் முடிவு குறித்து பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா, "பிரசாத்தின் முடிவை மாற்ற எவ்வளவோ முயன்றும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஜூனியர் சாம்பியன் அணியை தேர்வு செய்த பெருமை அவரைச் சேரும்" என்று கூறினார்.

இந்திய அணியின் தேர்வாளர்களிலேயே வெங்கடேஷ் பிரசாத் ஒருவர் தான் அதிகமாக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் (33 டெஸ்ட், 161 ஒருநாள் ஆட்டங்கள்) என்பது கூடுதல் தகவல்.

வெங்கடேஷ் பிரசாத்தலைமையிலான தேர்வு குழு தேர்ந்தெடுத்து அனுப்பிய பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) இந்திய அணி, உலகக் கோப்பை வென்று சுமார் ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

இந்திய சீனியர் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத், 30 மாதங்கள் இந்தப் பொறுப்பில் இருந்துள்ளார்.