மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் பெண்கள் பிரிவில் நாமக்கல் அணி முதலிடம் பெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டி இராசிபுரம் அருகே பாவை கல்வி நிறுவன வளாகத்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது.

மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 27 மாவட்டங்களிலிருந்து 650-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டிகள் நாக்அவுட் முறையில், மூன்று பிரிவுகளில் நடைபெற்றன.

மகளிர் பிரிவு குழுப் போட்டியில் உடல் முழுவதும் இலக்காகக் கொண்டு வீசப்படும் போட்டியில் நாமக்கல் அணி தங்கமும், சென்னை அணி வெள்ளிப் பதக்கமும் பெற்றன.

கட் பனியன் அளவுக்கு வீசப்படும் வாள்வீச்சு போட்டியில் சென்னை அணி தங்கமும், நாமக்கல் அணி வெள்ளிப் பதக்கமும் பெற்றன.

இடுப்புக்கு மேல் அனைத்துப் பகுதிகளையும் இலக்காகக் கொண்டு வீசப்படும் போட்டியில் நாமக்கல் அணி தங்கமும், சென்னை அணி வெள்ளிப் பதக்கமும் பெற்றன.

ஆடவர் பிரிவு: உடல் முழுவதும் இலக்காகக் கொண்டு வீசப்படும் போட்டியில் கன்னியாகுமரி அணி தங்கமும், நாமக்கல் அணி வெள்ளிப் பதக்கமும் பெற்றன.

கட் பனியன் அளவுக்கு வீசப்படும் போட்டியில் கன்னியாகுமரி அணி தங்கமும், நாமக்கல் அணி வெள்ளிப் பதக்கமும் பெற்றன.

இடுப்புக்கு மேல் அனைத்துப் பகுதிகளையும் இலக்காகக் கொண்டு வீசப்படும் போட்டியில் சென்னை அணி தங்கமும், கன்னியாகுமரி அணி வெள்ளிப் பதக்கமும் பெற்றன.

ஆடவர் தனிநபர் பிரிவில் உடல் முழுவதையும் இலக்காகக் கொண்டு வீசப்படும் வாள்வீச்சுப் போட்டியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஏ.அபிஷ்குமார் தங்கப் பதக்கமும், ஏ.கரிஷ் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

இடுப்புக்கு மேல் அனைத்துப் பகுதிகளையும் இலக்காகக் கொண்டு வீசப்படும் வாள்வீச்சுப் போட்டியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த எம்.பாஜூ தங்கமும், நாமக்கல்லைச் சேர்ந்த ஆ.அரவிந்தவேலன் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

கட் பனியன் அளவுக்கு வீசப்படும் வாள்வீச்சு போட்டியில் சேலத்தைச் சேர்ந்த எஸ்.மெய்யப்பன் தங்கமும், கே.எஸ்.அஜீத் குமார் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

தனிநபர் உடல் முழுவதும் இலக்காகக் கொண்டு வீசப்படும் வாள் வீச்சுப் போட்டியில் வேலூரைச் சேர்ந்த சி.சங்கவி தங்கமும், மதுரையைச் சேர்ந்த கே.பிருந்தா மஞ்சரி வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

கட் பனியன் அளவுக்கு வீசப்படும் வாள் வீச்சுப் போட்டியில் திருவள்ளூரைச் சேர்ந்த சி.அமரிய அக்ஷிதா தங்கமும், சென்னையைச் சேர்ந்த பி.சுவர்ணபிரபா வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

இடுப்புக்கு மேல் அனைத்துப் பகுதியையும் இலக்காகக் கொண்டு வீசப்படும் வாள்வீச்சுப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த கே.அனிதா தங்கமும், கன்னியாகுமரி செளமியா வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

போட்டியில் முதல் பரிசாக ரூ. 1 இலட்சம், இரண்டாவது பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாவது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதுநிலை மேலாளர் வெ.வாழ்வீமராஜா தலைமை வகித்தார்.

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் வி.நடராஜன் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.

பரிசளிப்பு விழாவில், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சி.த.பெரியகருப்பன் வரவேற்றார். ஆணைய திருச்சி மண்டல மேலாளர் ஆர்.கீதாஞ்சலி முன்னிலை வகித்தார்.