யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா ஷரபோவா, வீனஸ் வில்லியம்ஸ், டொமினிகா சிபுல்கோவா, கரோலின் வோஸ்னியாக்கி, அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ், சாம் கெர்ரி ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

ஊக்கமருந்து புகாரில் விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஷரபோவா பங்கேற்பது இது முதல் முறையாகும்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் அமெரிக்காவில் நடைப்பெற்று வருகிறது.

இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா தனது முதல் சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஷரபோவா 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஹேலப்பை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஷரபோவா தனது 2-வது சுற்றில் ஹங்கேரியின் டிமியா பாபோஸை சந்திக்கிறார்.

மற்றொரு முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்லோவேகியாவின் விக்டோரியா குஸ்மோவாவுடன் மோதியதில் 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் குஸ்மோவாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.

வீனஸ் வில்லியம்ஸ் தனது 2-வது சுற்றில் பிரான்ஸின் ஒஷன் டோடினை எதிர்கொள்கிறார்.

முதல் சுற்றுகளில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா 6-7(7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான ஜானா செபலோவாவை வீழ்த்தினார்.

டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் மிஹேலா புஸார்னெஸ்குவை வீழ்த்தினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் 7-6(9), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் பார்படோஸின் டேரியன் கிங்கை வீழ்த்தினார்.

அமெரிக்காவின் சாம் கெர்ரி 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கில்லெஸ் சைமனை வீழ்த்தினார்.