under nineteen australian team captain is an indian



அண்மையில் நியூசிலாந்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை இந்திய அணி வென்றது. 

உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த இலக்கை எளிதாக எட்டிய இந்திய அணி கோப்பையை தட்டி சென்றது.

போட்டிக்குப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜேசன் சங்கா, இந்திய அணியை வெகுவாகப் பாராட்டினார். அப்போது, இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே அபாரமாக இருந்தது. ஷப்மன் கில், ப்ரித்வி ஷா ஆகியோர் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்ததை ரசித்தேன். தனிப்பட்ட முறையில், இந்திய அணியின் ஆட்டத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜேசன் சங்காவின் பூர்வீகம் ஆஸ்திரேலியா அல்ல. ஜேசன் சங்காவின் பூர்வீகம் இந்தியா. அவரது முழுப்பெயர் ஜேசன் ஜாஸ்கிரத் சிங் சங்கா. ஜேசனின் தந்தையின் பெயர் குல்தீப் சங்கா. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குல்தீப், 1980களில் படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்று, பின்னர் அங்கேயே குடியேறிவிட்டார். 

ஜேசனின் தந்தை குல்தீப் சங்கா, ஆஸ்திரேலியாவின் நியூகேஸ் நகரில் ராஜ் கார்னர் என்ற பெயரில் சில உணவகங்களை நடத்தி வருகிறார். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர், ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியது, உலகம் முழுதும் பரந்து வாழும் இந்தியர்களுக்கு மேலும் ஒரு பெருமையே. ஆஸ்திரேலிய அணியில் மற்றொரு வீரரான பரம் உப்பல் என்பவரும் இந்தியாவின் சண்டிகர் நகரில் பிறந்தவர்.